Saturday, October 28, 2006

விக்கி பசங்க நாங்க....

புதுசா ஒரு வலைப்பூ ஒண்ணு மலர்ந்திருக்கு. அதுதான் இந்த விக்கி பசங்க. நீங்க பாத்தீங்களா? பாத்த சிலவங்க மனசுல ஓடுன கேள்விகளை இங்க போட்டு இருக்கேன் பாருங்க.

என்னடா இந்த பசங்க கொத்துன பரோட்டாவையே மேல மேல கொத்தியிருக்காங்க. அடுத்து வந்த பாஸ்டாவும் பழசுதான். என்ன மேட்டர் தெரியலையே. ஒரு வேளை சமையற் குறிப்பு போடத்தான் இந்த வலைப்பதிவா? ஆனா அடுத்து வந்த ஆரஞ்சு ஜூஸ் மேட்டரில் ஆளைக் கவுத்துட்டாங்களே. என்ன இது என சிலர்.

என்னடா இந்த பசங்க. ஒருத்தன் தொந்தரவே தாங்க முடியலையே. நாலஞ்சு பேர் வேற சேர்ந்துக்கிட்டாங்க. என்ன அக்குறும்பு பண்ணப் போறாங்களோ தெரியலையேன்னு இன்னும் சில பேர்.

அடடா, இவனுங்க ஆளுக்கு ஓண்ணு ரெண்டு வலைப்பூக்களை வெச்சிக்கிட்டு பி.க. பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த வலைப்பூ வந்தாலும் வந்தது. தமிழ்மண முகப்பு பூரா வைரஸ் மாதிரி இவனுங்க பேர்தான் தெரியுது, இது என்ன மேட்டர்? இதுக்கு எதாவது போலீஸ்கார் தயார் பண்ணி அனுப்பலாமா என மேலும் சிலர்.

என்னமோ திட்டத்தோடத்தான் வந்திருக்காங்க. ஆனா விஷயம் என்னான்னு பிடிபடலையேன்னு சில பேர்.அதுல சில பேருக்கு விஷயம் பிடிபடாமலேயே, இந்த கூட்டணி நல்ல ஸ்ட்ராங்கா தெரியுதே, நாமளும் சேர்ந்துக்கலாமான்னு ஒரு யோசனை.

போட்ட மூணு பதிவும் பழைய மேட்டர். மீள்பதிவுக்கு தனியா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சிட்டானுங்களா? இல்லை இது இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்ப்பதற்காக செய்த கட் பேஸ்ட் வேலையா? ஒண்ணுமே புரியலையே அப்படின்னு மண்டையை உடைச்சிக்கற சில பேர்.

இந்த வாலிபர்கள் சேர்ந்ததுனால பசங்கன்னு பேரு சரி. அது என்ன முன்னால விக்கி அப்படின்னு ஒரு பேரு அப்படின்னு யோசிக்கிறவங்க ஒரு பக்கம். என்னதான் நடக்குது பார்த்திடலாமுன்னு ஒரு முடிவோட அடிக்கடி வந்து ஆஜர் குடுத்துட்டு போற நண்பர்கள் குழாம் ஒண்ணு.

இவங்க எல்லாருக்கும் நான் சொல்லப் போற பதில் ஒண்ணுதான். விஷயம் இருக்கு. உங்களுக்கு கட்டாயம் சொல்லத்தான் போறோம். என்ன இன்னும் ஒரு நாள், ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. திங்கள்கிழமை விக்கிப்பையன் உங்களுக்கு எல்லாம் ஒரு சேதி தருவான். அதனால அன்னிக்கு அங்க வந்து என்னான்னு கேட்டுக்கிட்டு போங்க.

அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாம். இருக்கற மூணு பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க. என்ன? :-D

ராமநாதன் வலைப்பூவில் இது சம்பந்தப்பட்ட பதிவு இது.

Tuesday, October 24, 2006

பிளேனில் போனா போலீஸ் புடிக்கும்

என்னடா இவன் இப்போதான் தமிழில் பேசினா போலீஸ் புடிக்கும் அப்படின்னு எழுதினான். இப்போ அமெரிக்காவில் பிளேனிலேயே போகக் கூடாதான்னு கேட்கும் மக்களே, இந்தப் பிரச்சனை நம் திருநாடாம் இந்தியாவில்தான். அட, ஆமாங்க ஆமாம். நேத்து ரீடிப் தளத்தில் இந்த செய்தியைப் படித்தேன். படிச்சதுலேர்ந்து வயத்தைக் கலக்குதப்பா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். மேட்டர் இதுதான்.

நம் நாட்டில் 126 விமானநிலையங்கள் இருக்காம். அதில் இயங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் (Operating Licence) பெற்றுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து. ஆமாம். அதிகமில்லை ஜெண்டில்மென் வெறும் ஐந்தே ஐந்து. தற்போதைய விதிமுறைகள் படி ஒரு விமான நிலையம் இயங்க வேண்டுமானால், இந்த அனுமதி பெற்றே தீர வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்களாக இந்த அனுமதி இல்லாமல் 121 நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அனுமதியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் பெற வேண்டும். இல்லையென்றால் இந்நிலையங்கள் இயங்க முடியாதென்று இத்துறை அமைச்சரகம் தற்பொழுது கெடு விதித்துள்ளது.

இந்த அனுமதி பெற்றிருக்கும் விமானநிலையங்கள் ஐந்தும் இவைதான் - புது தில்லி, மும்பை, கொச்சின், புட்டபர்த்தி மற்றும் மிசோரத்தில் இருக்கும் லெங்புய். நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற விமான நிலையங்கள் கூட அனுமதி பெறாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் புது தில்லி, மும்பாய் ரெண்டும் தனியார் வசம் சென்றாகிவிட்டது. சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் (International Civil Aviation Organisation) வற்புறுத்தலால்தான் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராணுவத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இந்நிலையங்கள் DGCA (Directorate General of Civil Aviation) என்ற அமைப்பிடம் சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும். அடுத்த ஐந்து மாதங்களில் இதைச் செய்ய வேண்டும். இது போன்று அவசரத்தில் அள்ளித் தெளித்தால் எவ்வளவு தூரம் இது முறையாகச் செய்யப்படுமோ தெரியவில்லை.

இந்த சமயத்தில் என் மனதில் சில கேள்விகள். உங்கள் கருத்தைத்தான் சொல்லுங்களேன்.
  • இது நாள் வரை எப்படி இவ்வளவு விமான நிலையங்களையும் அனுமதித்துள்ளனர்? ஒரு விமான நிலையம் கட்டும் பொழுது பெற வேண்டிய அனுமதிகள் பெறப் பெற்றனவா என்ற தணிக்கையே கிடையாதா?
  • இது சட்டபூர்வமான ஒன்றா? ஒரு விபத்தே நடந்தால் இது யார் பொறுப்பு?
  • இதனை இவ்வளவு நாள் அனுமதித்திருந்த அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்களா?
  • இப்பொழுது ராணுவமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோ, உள்ளூர் அதிகாரிகளோ எதேனும் ஆட்சேபணை எழுப்பினால் என்னவாகும்?

Sunday, October 15, 2006

வீடு பேறும் வண்டிச் சத்தமும்

இந்த வாரயிறுதியிலும் உருப்படியா ஒண்ணும் பண்ணாம குண்டுசட்டியில் குதிரை ஓட்டியாச்சு. மடிக்கணினியை வைத்துக்கொண்டு ஒரு தவமோன நிலையை அடையும் பொழுது ஒரு விவாத மேடையைப் பார்த்தேன். தங்கள் திருமணத்தில் வந்த மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பரிசுகளைப் பற்றிய விபரங்களும் அதன் மீதான விமர்சனங்களும் இருந்தன. அதில் ஒரு சம்பவம் இது -

" என் கணவரின் வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர். அதில் நால்வர் பெண்கள், என் கணவர் மட்டுமே ஆண்பிள்ளை. எங்கள் திருமணம் ஆகுமுன் மற்ற நால்வரின் திருமணமும் நடந்துவிட்டது. மிகப் பெரும் பணக்காரர்களான என் கணவரின் பெற்றோர்கள், தங்கள் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்குப் பரிசாக ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வாங்கித் தந்தார்கள்.

எங்கள் திருமணத்தின் போது எங்களுக்கு வீடு வாங்கித் தராமல் இரண்டு புதிய கார்கள் மட்டுமே வாங்கிப் பரிசாக தந்தார்கள். பின்னர் மறைமுகமாக இது பற்றிய பேச்சு வந்த பொழுது ஒரு ஆண்பிள்ளை தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அடுத்தவர் கையினை எதிர்பார்க்கக் கூடாது என பொருள் படும்படியாக கூறினர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
"


அத்தளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட சம்பவம் இது. பெரும்பாலான கருத்துகளை இரு வகைகளில் பிரித்து விடலாம்.

கருத்து - 1

அ) இரண்டு கார்கள் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இதில் குறை காண்கிறீர்களா? எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே கிடையாதா? எத்தனை பேருக்கு இப்படி ஒரு பரிசு கிடைக்கும்?


ஆ) எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா? உங்கள் முயற்சியில் நீங்கள் வீடு வாங்கி அவர்களுக்குச் சமமாக உயர வேண்டுமென்பதே அவர்கள் ஆசையாய் இருக்கும்


இ) பெண்களுக்கு அவ்வளவு செய்து அவர்கள் நொடித்துப் போயிருக்கலாம். அல்லது மற்ற வழிகளில் பணக்கஷ்டம் வந்திருக்கலாம். உங்களுக்கு முழு விபரங்கள் தெரியுமா?



கருத்து -2

அ) என்ன கிடைத்தது என்பதைப் பற்றிய பிரச்சனை இல்லை இது. மகள்களுக்கு ஒரு அளவுகோல் மகனுக்கு வேறு அளவுகோல் என்பது எந்த விதத்தில் சரி?


ஆ) தன் முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற அறிவுரை அவர் மருமகன்களுக்குக் கிடையாதா?


இ) மற்றவர்களுக்குச் செய்தது போல், அவர்களுக்கு வீடு கொடுக்கப் போவதில்லை என்பதை முன்பே சொல்லி இருந்தால், இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்காது அல்லவா?


இப்படி ரொம்ப பேரு வந்து கருத்து சொன்னாங்கப்பா. ரொம்ப சுவாரசியமா இருந்தது. இந்த மாதிரி நிறையா பேரு வந்து கருத்து சொல்லற விஷயங்கள் எல்லாம் நமக்கு அல்வா மாதிரியா, அதான் எடுத்துப் போட்டாச்சு. உங்க கருத்து என்ன? மாற்று கருத்துகளுக்கு உங்க பதில் என்ன? எல்லாம் வந்து விவரமா போடுங்க.

வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. அப்புறம் தலைப்புக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா, ஒரு பதிலும் இல்லைப்பா. இந்த மாதிரி எல்லாம் பேரு வெச்சாத்தானே வருவீங்க. அதான்.

Tuesday, October 03, 2006

தமிழில் பேசினால் தீவிரவாதியா?

விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்பேசியில் தமிழில் பேசினாராம். அதனால் சந்தேகப்பட்டு போலீஸார் அவரை விசாரணைக்கு கொண்டு சென்றனராம். பாவம், அவரும் இதனால் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டாராம். அதைப் பற்றிய ரீடிஃப் செய்தியைப் பாருங்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் இதை அனுமதித்தாலும் கூட, இச்செய்தியின் கடைசி வரியைப் பாருங்கள். இனி விமான நிலையங்களில் அன்னிய மொழிகளில் பேசுவதில்லை என அவர் அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளாராம்.

என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்வார்களா? தமிழ் பேசும் நல்லுலகே, உங்கள் கருத்துகளைப் போட்டுத் தாக்குங்க.

இதுதான் அந்தச் செய்தி.

A Tamil-speaking man in the US missed his flight from Seattle over the weekend because at least one person thought he was suspicious.

According to a report in Seattle Post Intelligencer, the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when getting ready to board an American Airlines flight to Dallas' Fort Worth International Airport.

An off-duty airline employee heard the conversation and alerted the flight crew.

"It's a big misunderstanding," said Bob Parker, the airport spokesman. "He had a perfectly innocent explanation that all added up."

The spokesman noted that it was mandatory for airport officials to investigate reports of suspicious activity. The man was supposed to be talking of a sporting rivalry involving his alma mater.

Parker had no explanation as to why a man speaking Tamil would be considered suspicious. The person who contacted airport officials could give an answer to that question, he added.

The detained person was said to be cooperative and later boarded a flight to Texas. He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.

Monday, October 02, 2006

புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)

இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.

முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.

புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.

இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.

கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான். நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்

எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.

என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.

சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?

சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.

- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.

- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.

- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.

- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.

- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.

- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.

- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.

- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.

- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.

- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.

- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.

முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.