Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, October 20, 2010

வே.உ.ப.உ.தொ.தொ!!

தமிழ் இலக்கண வகுப்பில் சொல்லித் தந்ததில் பலதும் மறந்து போயிட்டாலும் நினைவில் நிற்கும் இரண்டு பெயர்கள் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளும்தான். இப்படி முழ நீளத்துக்கு பெயர் இருக்கிறதுனாலவோ என்னவோ இதுங்க ரெண்டும் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு.

பெயர் ஞாபகம் இருக்கிறது எல்லாம் சரிதான். ஆனா அப்படின்னா என்னன்னு கேட்கறீங்க இல்லையா! இந்த வேற்றுமை உருபுகள் பத்தி தமிழ் பேப்பரில் சொல்ல ஆரம்பிச்சு இருக்கேன்.

இங்க பாருங்க.

Tuesday, October 12, 2010

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே!

இந்த இலக்கணத் தொடர் ஆரம்பிச்ச வேளையில் இருந்தே நண்பர்கள் எல்லாரும் தமிழில் எப்போ கூடுதலா க், ச் எல்லாம் போடணும். எப்போ போடக்கூடாது அப்படின்னு கொஞ்சம் சொல்லேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதே மாதிரி முதல் ரெண்டு பாகங்களைப் படிச்சவங்க. இன்னும் கொஞ்சம் மெதுவாகப் போகலாம், நிறையா எடுத்துக்காட்டு வேணும், முடிவில் நறுக்கென்று அந்த பாகத்தின் சாரம்சத்தைத் தரலாம்ன்னு நிறைய கருத்து சொல்லி இருந்தாங்க.

இதை எல்லாம் முடிஞ்ச வரை செஞ்சு மூணாவது பாகம் போட்டு இருக்கேன். படிச்சுப் பாருங்க. இன்னும் என்ன செஞ்சா புரிய எளிதாக இருக்கும்ன்னு சொல்லுங்க.

மூணாவது பாகத்தைப் படிக்க இங்க போங்க.

நன்றி.

Thursday, October 07, 2010

கொஞ்சம் பயமாவே இருக்கு!!

பாரா குடுத்த தைரியத்தில் நான் அந்த இலக்கணத் தொடரை ஆரம்பிச்சேன். ஆனா முதல் பகுதிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்தால் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனோன்னு பயமாவே இருக்கு. எதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதறேன். அடிக்கணமுன்னு முடிவு பண்ணிட்டா தயவு செஞ்சு தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போய் அடிங்க. பப்ளிக்கா வேண்டாம்.

ரெண்டாவது பகுதி இன்னிக்கு ரிலீஸ் - இங்க போய் பார்த்திட்டு, கருத்து சொல்லுங்க.

நன்றி வணக்கம்.

Friday, October 01, 2010

தமிழ் பேப்பரில் கொத்தனார் நோட்ஸ்!

சமீபத்தில் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. நான் பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் வேப்பங்காயாகக் கசந்ததிற்கான காரணம் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. அன்றைக்கு இருந்த புத்தகம் ஒரு மாற்றமும் இன்றி இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. ஒரு சேம்பிள்

தனிக் குறிலை அடுத்து வரும் மெய்யெழுத்தை ஈற்றில்கொண்ட சொற்களின்முன் வருமொழி முதலில் உள்ள உயிர் வந்து புணரும்பொழுது நிலைமொழி ஈற்றுமெய் இரட்டித்து இரட்டித்த அந்த மெய்யுடன் உயிர் சேர்ந்து, உயிர்மெய்யாகி புணர்ந்து ஒலிக்கும்.

இப்படி திவச மந்திரம் போல் எழுதி இருந்தால் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்தை எப்படி கவரும்? அவர்களுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எப்படி வரும்? படிக்கும் காலத்தில்தான் கோட்டை விட்டுவிட்டோம் இப்பொழுதாவது படித்துப் புரிந்து கொள்ளலாமே என்ற ஒரு ஆர்வத்தில் படிக்கத் தொடங்கினேன். தேர்வெழுத வேண்டாம் என்ற நினைப்பு மேலும் தெம்பைத் தந்தது.

பாராவிடம் இது பற்றி சொல்லி அங்கலாய்த்துக் கொண்டிருந்த பொழுது, “குறை சொல்வதை விடுத்து இதனை எளிமையாக எழுதிப் பாருமே” என்றார். ஒரு சிறிய முயற்சி செய்து காண்பித்த பொழுது, நன்றாக வந்திருக்கிறது எனச் சொல்லி ஊக்குவித்தார். சில திருத்தங்களையும் சொன்னார். அவர் சொன்னதின் பெயரில் எனக்குப் புரிந்தவற்றை தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணம்.

இன்று வெளியாகி இருக்கும் தமிழ் பேப்பர் இணைய இதழில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருக்கிறேன். படித்து கருத்தைச் சொல்லுங்கள்.