Saturday, September 03, 2011

கங்குமில்ல கரையுமில்ல!

மீண்டும் ஒரு சொலவாடை. அதற்கான பொருள் என்ன என்ற வினா! இந்த முறை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது @rsgiri. ”கங்குமில்லே கரையுமில்லே” அப்டின்னு ஒரு சொல்வழக்கு இருக்கா? இல்லைன்னா சரியான வழக்கு + அர்த்தம் சொல்ல முடியுமா என்று ஆட்டத்தை ஆரம்பித்தார். 

@sanchemist என்ன சார் இப்பிடி கேட்டுட்டீங்க? வள்ளலார் பாடல்ல வருமே “ கங்கு கரை காணாத கடலே “ என வள்ளலாரை கூட்டிக் கொண்டு வந்து கங்கு கரை என்ற சொலவாடை பயன்படுத்தியதற்கு சான்று ஒன்று தந்தார். ஆனால் கங்கு கரை என்பதற்கு பொருள் வரவில்லை என்று விடாக் கண்டனானார் கிரி. 

@kryes கங்கு என்றால் அளவு. கரை என்றால் ஆற்றின் கரை, கடற்கரை என்பதில் வருவது போல எல்லை என்ற பொருள் கொண்டதாகும். கங்கு கரை காணாத கடலே என்றால் அளவில்லாத, எந்த விதமான எல்லையும் இல்லாத கடலே என விளக்கினார். கங்குமில்ல கரையுமில்ல என்றால் அளவில்லாத எல்லையில்லாத என்ற பொருள் கொண்டதாகும் என்றார். 

கிரி என்ன நினைத்தாரோ தெரியாது. வேறு விளக்கங்கள் வேண்டும் என்று நின்றார். 

அவருக்காக ஒரு ஜாலி விளக்கம். 

கங்கு என்பதற்கு பனையோலை மரத்தில் சேரும் இடம் என்ற பொருளும் உண்டு. கரை என்பதைக் கரைதல் என்ற பொருளிலும் பயன்படுத்தலாம். கங்குமில்ல என்றால் பனையோலை மரத்தைப் பற்றும் இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்போ பனையோலைன்னு சொன்னா, அதை அப்படியே எடுத்துக்காம அதை ஒரு உவமையாக எடுத்துக்கணும். பற்றுதல் இல்லாமல் இருந்தால்ன்னு பொதுப்படுத்தலாம். கரையுமில்ல என்பதை கரை இல்லைன்னு சொல்ல வராம, செய்வோமுல்ல என்று மதுரை தமிழில் சொல்வது போல, கரையுமில்லன்னு எடுத்துக்கலாம். 

அப்போ பற்றற்று இருந்தா நம்ம ஜீவன், கடவுளோட சேர்ந்து ஒண்ணாகி நமக்கு முக்தி கிடைக்கும். இதைத்தான் கங்குமில்ல, கரையுமில்லன்னு எளிமையாச் சொல்லறாங்க! 

இன்னும் ஒரு விதமாச் சொல்லலாமா? 

இப்போ கங்குன்னா தீக்கங்கு.கரைன்னா அழைக்கிறது.கரைத்தனன் அப்படின்னு இலக்கியத்தில் வரும். அப்படின்னா அழைத்தான்னு அர்த்தம். இப்போ ஒருத்தர் பசியோட இருக்காரு. அவரு வீட்டுல சாப்பாட்டுக்கு வழி இல்லை. அடுப்படியில் பூனை தூங்குதுன்னு சொல்லற மாதிரி அவங்க வீட்டில் அடுப்பைப் பத்த வெச்சே நாளாச்சு. சரி நம்ம வீட்டில்தான் சாப்பிட வழியில்லை, நம்ம நிலமை தெரிஞ்ச எவனாவது கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு போடுவானான்னு பார்த்தா எவனும் கூப்பிடலை. திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்து தெருவில் போகும் ஒருத்தர், இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்ன்னு கேட்கறாரு. அதுக்கு இவரு பதில் சொல்லறாரு - “கங்குமில்ல,கரையுமில்ல”! 

வேற எப்படியாவது சொல்ல முடியுமா? 

 

Posted via email from elavasam's posterous

Friday, September 02, 2011

அடி மேல அடி வெச்சா....

என் அண்ணன் அவர் பேஸ்புக்கில் இந்த துணுக்கைப் போட்டு இருந்தார். 

 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - அந்தக் காலம்

மீட்டர் மேல் மீட்டர் வைத்தால் க்ரைண்டரும் நகரும் - இந்தக் காலம் ;)”

 

இதற்கு என் பதில் 

 

அடி என்பது ஆசையாக மனைவியைக் கூப்பிடுவது.

அடி மேல் அடி என்பது, தகப்பனார் அடி எனக் கூப்பிடும் அம்மாவின் மீது தான் அடி என அழைக்கும் மனைவியை வைப்பது!

அதாவது அது வரை அம்மா இருந்த இடத்தில் மனைவியை இருத்த, அம்மிக் குழவி ஆயுதமாகப் பறக்கும் என்பது இந்த சித்தாந்தம். 

இதை நவீனப்படுத்துவதன் மூலம் உன் ஆணாதிக்க மனப்பான்மையே வெளியே தெரிகிறது!

Posted via email from elavasam's posterous