Thursday, March 14, 2013

Voices Within - Bombay Jayashri & T M Krishna with Mythili Chandrasekar


Coffee Table Book என்றாலே உடனே என்ன தோன்றும்? வழவழத் தாளில் படங்கள், அங்கும் இங்குமாய் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள், கெட்டியான அட்டை, தூக்க முடியாத எடை, நட்சத்திர ஹோட்டல் அல்லது பெரும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும், யாரும் படிக்க மாட்டார்கள். இதுதானே நினைவுக்கு வரும். எதோ இயற்கை காட்சிகள் என்றால் படமாவது பார்க்கும்படியாக இருக்கும் ஆனால் இசை பற்றிய அதுவும் பாரம்பரிய இசை பற்றிய புத்தகம் என்றால்?
 
பார்க்கலாம், படிக்கலாம், பிரமிக்கலாம், சேமிக்கலாம், இன்னும் பல -லாம்கள் போடலாம். கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும், விளம்பர உலகில் புகழ் பெற்று விளங்கும் மைதிலி சந்திரசேகருடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் Voices Within என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு விமர்சனம்தான் அது. படங்கள், வழவழ பக்கங்கள், கெட்டி அட்டை, ஒற்றைக் கையால் தூக்க முடியாத எடை என்ற சம்பிராதயமான விஷயங்கள் எதிலும் குறை வைக்காமல் இருந்தாலும் சுவாரசிய தகவல்களையும் சம்பவங்களையும் அள்ளித் தெளித்து கையில் எடுத்தபின் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாமல் செய்தது வித்தியாசம்தான்.  
 
கர்நாடக சங்கீத உலகில் கோலோச்சிய ஏழு பிரபலங்களின் வாழ்க்கையை பற்றிய சிறு குறிப்பு வார்த்தைகளாவும் படங்களாகவும் இப்புத்தகத்தின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது வெறும் புத்தகம் அல்ல இவர்கள் ஏழு பேர்களுக்கும் எங்கள் வணக்கம் என்று முன்னுரையில் சொல்லப்பட்டு இருப்பது புத்தகத்தின் எல்லா பக்கத்திலும் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பின்பற்றப்பட்டு இருக்கிறது. சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்கள் தொடங்கி கர்நாடக சங்கீதத்தில் ஏழு என்ற எண்ணிற்கு எப்பொழுதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. அதை ஒட்டியே இவர்களும் ஏழு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கள் புகழ்மாலையாக இப்புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் இவ்விருவரும். 

யார் அந்த எழுவர்? எத்தனையோ பேர் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் மட்டும்? இக்கேள்விகளுக்கும் புத்தகத்திலேயே விடை இருக்கிறது. 
 
  •  அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - இன்றைய கச்சேரி முறையை அறிமுகப்படுத்தி கர்நாடக சங்கீதத்தை பெரும்பான்மையிடம் கொண்டு சேர்க்கும் அரிய காரியத்தைச் செய்தவர்.
  •  டி.என்.ராஜரத்தினம் பிள்ளை - நாகஸ்வர ராஜா. நாகஸ்வர வித்தையையும் தாண்டி நின்ற ஆளுமை. தனக்கான, தன் இசைக்கான இடத்தைப் பெற போராடத் தயங்காத போராளி.
  •  செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் - கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமகர். இசை தாண்டி பலவித ஒழுங்குமுறைகள் வரக் காரணமாக இருந்தவர்.
  •  ஜி.என்.பாலசுப்ரமணியம் - தேன் குரலோன். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதுவரை இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்.
  •  பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம் என்றால் மணி ஐயர். மணி ஐயர் என்றால் மிருதங்கம் என்ற அளவிற்கு திறமை கொண்டவர்.
  • எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி - இசைக்குயில். கர்நாடக சங்கீதத்தை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகமே அறியச் செய்தவர். நம் பாரதத்தின் ரத்தினம்.
  •  டி.ஆர்.மஹாலிங்கம் - புல்லாங்குழலுக்கென்றே பிறந்தவர். ஜீனியஸ். எந்த விதமான சட்டதிட்டங்களும் தம்மை பாதிக்காமல் இருந்த புரட்சியாளர்.
இவர்கள்தான் அந்த ஏழு பேர். ஒவ்வொரு கலைஞனுக்கும் 25 - 30 பக்கங்களில், அவரின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள், சம்பவங்கள், அவர்களின் கலை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என்று கலவையாகத் தொகுத்து எழுதப்பட்ட பக்கங்கள். இதற்குத் துணையாக அரிய கருப்பு வெள்ளை படங்கள் என்று அமர்க்களமாய் செய்திருக்கின்றார்கள். 

மூத்த கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயருக்கு பதிலாக களமிறங்கிய சின்ன வயது ஜிஎன்பியின் கச்சேரியை விவரிக்கும் விதமாகட்டும், அரியக்குடி காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை அவருடைய நாள் ஒன்றை விவரிக்கும் விதமாகட்டும் நாமும் அவர்கள் கூடவே இருப்பது போன்ற விவரிப்பு. எனக்கு குழலை விட வயலின் நன்றாக வரும் எனச் சொல்லும் மாலி, என் கச்சேரிக்கு நேரம் நிர்ணயிக்க நீங்கள் யார் என்று ஆல் இந்திய ரேடியோவை கேள்வி கேட்ட பிள்ளைவாள், மற்றவர்களை விட தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் சன்மானம் தர வேண்டும் எனச் சொன்ன அரியக்குடி என்பது போன்ற சுவாரசியத்திற்கு குறைவில்லா தகவல்கள் நிறைந்த புத்தகம். வெறும் பெருமைகளை மட்டும் சொல்லாமல் அரியக்குடியின் கருமித்தனம், மாலியின் சூதாட்டம் என்று அவர்களை சாதாரண மனிதர்களாகவே சொல்லி இருப்பது எனக்குப் பிடித்தது. 

ஆனால் Coffee Table Book என்பதால் தேடித்தேடித் தேர்ந்தெடுத்த படங்கள்தான் புத்தகத்தின் ஹைலைட். ராஜாவைப் போன்ற ராஜரத்தினம் பிள்ளை, ராஜா வேஷத்தில் சினிமாவில் நடித்த ஜிஎன்பி, செம்மங்குடியின் இளமை முதுமை காலப் படங்கள் என்று அற்புதமான படங்களோடு, 78ஆர்பிஎம் ரெக்கார்டுகளின் படங்கள், 1943ஆம் ஆண்டு அரியக்குடி பாடிய கச்சேரியின் பாட்டு லிஸ்ட்(ஹமாம் விளம்பரத்துடன்), எம்.எஸ் ஆங்கில உரை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு தயார் செய்கையில் சரியான உச்சரிப்புக்காக அதில் தமிழில் எழுதிக் கொண்ட படம் என வித்தியாசமான படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள். 

2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், கர்நாடக இசைக்கலைஞர்கள் பற்றி அத்துறை வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் புதிய முயற்சி என்பதே வாங்கிப் படிக்கவும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் போதுமான காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் ஒன்றும் வந்திருக்கிறது. அதை படித்துப் பார்க்கவில்லை என்பதால் மொழியாக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 

Voices Within | Bombay Jayashri, TM Krishna | 188 Pages | Rs.1900 | http://www.matrka.org/voiceswithin/index.html 

ஆம்னிபஸ் என்ற தளத்தில் தினம் ஒரு புத்தகத்தின் விமர்சனத்தினை வெளியிடுகிறார்கள். அத்தளத்தில், ஒரு வாரம் முழுவதும் அவர்கள் இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனங்களை வெளியிட்ட பொழுது, எழுதியது - http://omnibus.sasariri.com/2013/03/voices-within-bombay-jayashri-t-m.html


Wednesday, March 06, 2013

தமிழ் வளர்க்க சங்கம். சரி, ஆனால் தமிழைக் கற்க?

நண்பர் @anoosrini எழுப்பும் கேள்வி இது. விளையாட்டாய் பலரும் வாத்தி என்று ட்விட்டரில் அழைப்பதால் இதை என்னிடம் கேட்டுவிட்டார் போல! அவர் என்னிடம் கேட்டு கொஞ்ச நாள் ஆனது. ஆனால் என்னிடம் பதில் இல்லை. இது குறித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். 

இனி அனுவின் கேள்வி 

தமிழை தனிப்பட்ட முறையில், பள்ளி சாராமல், ஒரு மொழியாக கற்க முடியுமா? இது எனக்குள்ள ரொம்ப நாளா இருக்கற கேள்வி. நான் பள்ளியில் இரண்டாவது மொழியாக தமிழ் படித்தேன்.  ஆனால் பள்ளியில் தமிழை ஒரு மொழியாகச் சொல்லித் தராமல் ஒரு பாடமாகத்தான் சொல்லித் தருகிறார்கள்.

 நான் பள்ளி வழியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்தி படித்திருக்கிறேன். அதற்கு தக்ஷிண பாரத் இந்தி ப்ரசார் சபா இருக்கு. ஃப்ரென்ச் படித்திருக்கிறேன், Alliance Française இருக்கு. ஸ்பானிஷ் படித்திருக்கிரேன், Instituto de Cervantes இருக்கு. மாண்டரின், ஆங்கிலம், ஜாப்பனீஸ், ஜெர்மன், என்று எல்லா முக்கிய மொழிகளையும் உலகம் முழுவதும் படிக்க முடியும். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

அவ்வளவு ஏன்? சென்னையிலேயே இவை அனைத்தையும் படிக்க முடியும். ஆனால் தமிழ் கற்றுக் கொடுக்க, இப்படி ஒரு அமைப்பு இல்லையே என்ற ஆதங்கம் வெகு நாட்களாக எனக்கு உண்டு.

நான் சென்னையில் இருந்த போது, பக்கத்து வீட்டிற்கு ஒரு ஃப்ரென்ச் குடும்பம் குடி வந்தது. அந்த ஃப்ரென்ச் அம்மணி என்னிடம் "நான் தமிழ் படிக்க விரும்புகிறென். இங்கு எதாவது ஸ்கூல் இருக்கிறதா?" என்று கேட்டார். தனியாக ட்யூட்டர் வைத்து படிக்கலாம் என்றேன். "தமிழ்நாட்டில் தமிழ் ஸ்கூல் இல்லையா?" என்று வியந்தார். நானும் யோசித்தேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் என்று பெருமை பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் புதுசாக யாரும் செய்யவில்லை. தமிழ்ப் படங்களை தடை செய்வதை விட்டு, தமிழைக் கற்றுத் தர வழி செய்யலாமே!

பி.கு. - ட்விட்டர் நிறுவனத்தார் இந்த பாஸ்டரஸ் தளத்தினை வாங்கிவிட்டார்கள். ஏப்ரல் மாதத்தோடு இந்த சேவைக்கு சங்கு ஊதப் போகிறார்களாம். வழக்கம் போல மீண்டும் ப்ளாக்ஸ்பாட்டுக்கே போக வேண்டியதுதான் போல. செய்வோம். 

 

Posted via email from elavasam's posterous