Wednesday, April 24, 2013

Happy Birthday Sachin! - ஒரு விருத்த விளையாட்டு.


இன்னுமோர் நூற்றாண்டிரும்! 

இன்றைய விருத்த விளையாட்டு - Happy Birthday Sachin! 

இந்த ஈற்றடி வெச்சுத்தான் போன முறை நாம எல்லாம் வெண்பா எழுதினோம்  - http://elavasam.blogspot.com/2012/04/blog-post.html

சொக்கனும் நானும் சேர்ந்து விருத்தம் எழுதப் பழகிக்கிட்டு இருக்கோம். இந்தத் தளத்தில் போனா இதுவரை எழுதிய விருத்தங்களைப் பார்க்கலாம் - http://6seer.wordpress.com

இன்னிக்கு விருத்தம் வழியே சச்சினுக்கு வாழ்த்து சொல்லிடலாம்ன்னு எழுதிட்டோம்.
எண்ண முடியா ஓட்டங்கள்
...எடுத்தாய் நீயே வல்லவனே
பண்ண ஏதும் பாக்கியுண்டா
...பாரினில் வேறு சாதனையே
மண்ணில் இருந்து மாறாகால்
...மனத்தில் இருத்து வேண்டுமதே
அண்ணன் சொல்லைக் கேட்டதினால்
...அமைதி தானுன் வாழ்வதிலே

உலகம் முழுதும் ரசித்திடுமே
...உந்தன் பேட்டிங் தானதையே
பலநாள் அதையே பார்த்தாலும் 
...பழசே ஆகா கலையதுவே
சிலபேர் பலதும் சொல்வார்கள்
...சிந்தை தனிலே ஏற்றாதே
விளையா டிடுவாய் பலகாலம்
...விருந்தாய் ரசிப்போம் நாங்களுமே!

வரிகள் நூறு போதாது
...வார்த்தை வழியே சொல்லிடவே
அறிந்தோம் ஆட்டம் அதனழகை
...அற்பு தமாய்நீ ஆடிடவே 
சிறந்த மனிதன் நீதானே
...சிரித்தே இருக்கும் வரம்பெறுவாய்
பிறந்த நாளாம் இன்றைக்கு
...பிரியம் தருவோம் பரிசாக!

சொக்கன் எழுதியது 
பால்மணம் கமழ்கிற பாலகனாய்ப்
....பாரதம் பார்த்தது அப்பயலை,
‘நூல்தரம் உணர்ந்திட அட்டையினை
....நோக்குதல் போதுமா?’ என்றவனும்
வேல்கரம் ஏந்திய முருகனைப்போல்
....வெறியுடன் ஆடினன் தாண்டவமே,
ஆல்மரம் போலவே தன்விதையை
....ஆடிய களம்தொறும் பதித்துவிட்டான்!

சுருள்கிற முடியினில் சூட்சுமமோ?
....சுழல்கிற பந்துகள் சிதறடிப்பான்,
வெருட்டிடும் விரைவுடன் வீசிடினும்
....வேகமாய் பவுண்டரி அவன்குவிப்பான்,
கருத்தினைக் குவித்தெவர் முனைந்திடினும்
....கட்டிடக் கூடுமோ காற்றினைத்தான்?
வருத்திய பவுலரென் றெவருமில்லை,
....வாமனன் இவன்புகழ் குறையவில்லை!

இவன்பொழி ரன்மழை தினங்களிலே,
....இந்திய தேசமே திளைத்திருக்கும்,
உவப்புடன் கண்ணிமை கொட்டாமல்
....ஊரெலாம் அவன்திறம் பார்த்திருக்கும்,
நவமணி ஒருஉரு எடுத்ததுபோல்
....நாயகன் ஆட்டமும் ஜொலிப்பதனால்,
தவம்புரி வோர்பலர் டீவிமுன்பு,
....தாமதம் தான்பிற வேலையெல்லாம்!

சோர்வினில் கிடக்கிற மனத்துக்கும்,
....சுமைகளில் களைக்கிற உடலுக்கும்,
ஓர்மருந் தாகிடும் இவன்ஆட்டம்,
....உடனடி வைட்டமின், கொண்டாட்டம்!
சீர்நிறை குணங்களின் உறைவிடமாய்ச்
....செந்நெறி உணர்த்திடும் சீராளன்!
பார்புகழ் குறைவறக் கிடைத்ததுவே,
....பண்புடன் உழைப்பினைக் கலந்ததனால்!

செஞ்சுரி செஞ்சிரு தொடங்கிஇவன்
....செய்தவை எழுதிடத் தாள்போதா,
எஞ்சிய சாதனை ஒன்றிரண்டே,
....இமயமும் இவனது இணையாமோ?
விஞ்சிட ஒருவரும் இலைஎனினும்
....வெற்றியில் கருவமும் கொள்ளாதோன்,
கொஞ்சிடத் துடித்திடும் இந்நாடே,
....கோமகன் சச்சினின் புகழ்பாடி!

இதைப் பார்த்த பெனாத்தலால சும்மா இருக்க முடியுமா? 
அடித்துக் களைப்பான் என்றெதிரி
... ஆவல் கொண்டே இருக்கையிலே
வெடித்துக் களத்தில் அதகளமாய்
... வேரை அறுத்து ஓட்டத்தை
முடித்துக் கொடுத்து வந்திடுவான்
...முழுமை தந்தே தான்சிரிப்பான்
படித்து மாளா சாதனையே
... பலநாள் சுகமாய் வாழ்ந்திடுநீ!

Happy Birthday Sachin! May you live another 100 years!

1 comments:

said...

Another sixer (aRuseer Virutham) By the virutham brothers! Chosen a lovely topic. Who cannot but love and admire Sachin :-)

Your poems are very simple to understand and easy on the tongue :-)

amas32