Friday, December 13, 2013

அழகுத் தமிழும் அம்பேல்!

இன்று வதனப்புத்தகத்தில் நண்பர் Murthy Subra அம்பேல் என்ற சொல் தமிழ்தானா என்று கேட்டார். அதற்கு இலக்கண வாத்தியார், வெண்பா வேந்தர் அண்ணன் என். சொக்கன் அது தமிழ் வார்த்தை இல்லை, ஆங்கிலேயர் I am bailing out எனச் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு I am bail என மாற்றி அது அம்பேல் ஆனது என்று ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அம்பேல் தமிழ்தான் என நிறுவ வேண்டி இருப்பது காலத்தின் கட்டாயமே. ஆங்கிலத்திலோ லத்தீனிலோ இது போன்ற கேள்விகள் எழுவதே இல்லை. அவர்களுக்கு தம் மொழி மேல் இருக்கும் நம்பிக்கை அத்துணை மகத்தானது. நம் தமிழுக்குத்தான் பாவம் இந்தக்கதி.

போகட்டும், அம்பேலுக்கு வருவோம். அம்பேல் என்றால் அந்த இடத்தை விட்டுக்காணாமல் போய்விடுவதுதானே. அதில் இருக்கும் ஏல் என்பதை என்ன எனப் புரிந்தால் அம்பேல் தமிழ்தானா என்ற கேள்வியே எழாது.

ஏல் என்பது இயல் என்பதன் திரிபு. அகராதியைப் புரட்டினோமானால் ஏல் என்பதற்குப் பல பொருள் உள்ளது விளங்கும்.

ஏல் (p. 151) [ ēl ] , V. v. t. receive, accept, admit, allow, ஒப்புக்கொள்; 2. stretch out hands in begging, receive alms, பிச்சைவாங்கு; 3. oppose in battle, ஏதிர்; 4. love, அன்புகூர்; 5. be equal, ஒத்திரு. v. i. be suitable for, agreeable to, becoming, இசை; 2. be excessive, abound, மிகு; 3. change, மாறுபடு; 4. happen, occur, சம்பவி, as in "ஏற்றதையுணர்கிலமென்று" (வில்லி;) 5. awake from sleep.

இதில் நாம் பார்க்க வேண்டியது ஒத்திரு என்னும் விளக்கத்தை மட்டுமே. அம்பினை ஒத்திருப்பது அம்பேல். அம்பு+ஏல்= அம்பேல்.

வில்லினிலிருந்து ஏவப்பட்ட அம்பானது எப்படி, அவ்விடத்தை விட்டு கடி வேகம் கொண்டு காணாமல் போகிறதோ அதைப் போல நானும் இவ்விடத்திலிருந்து அகல்வேன் எனச் சொல்லவே நாம் அம்பேல் என்கிறோம்.

இங்கு ஒரு சுவாரசியம். நாம் வேகமாகச் செல்வதை வில்லில் இருந்து கிளம்பும் அம்பாக உருவகப்படுத்துகிறோம். ஆனால் கம்பன் ராமனின் வில்லில் இருந்து கிளம்பிச் செல்லும் அம்பின் வேகத்தைப் பற்றி என்ன சொல்கிறான் தெரியுமா?

நம் வாயில் இருந்து செல்லும் வார்த்தைகளின் வேகம் போல் ராமன் எய்த அம்பு விரைந்தது என்கிறான். தாடகை வதம். அவளைக் கொல்ல ராமன் அம்பினை எய்கிறான். அதைச் சொல்லும் பொழுது கம்பன்

சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுத்தலும்...

எனச் சொல்கிறான். கோபத்தில், சற்றும் எண்ணாமல், பேசிடும் பொழுது சொல்லானது நம் வாயில் இருந்து வேகமாய்ச் செல்வது மட்டுமல்லாது அதைக் கேட்பவரைக் காயமும் படுத்தும் அல்லவா? அதைப் போல வேகமாய்ச் சென்று காயப்படுத்தும் அம்பு எனச் சொல்வது எத்துணை பொருத்தம்!

அப்படிச் சொல்லின் வேகத்தைப் போலச் சீறிப் பாயும் அம்பினை ஒத்து நானும் செல்கிறேன் என்பதைத்தான் நான் அம்பேல் எனச் சுருங்கச் சொல்கிறோம்.

அம்பேல் தூயதமிழ்ச் சொல்லே. இனியும்  இது குறித்த ஐயம் வேண்டாம்.

#எல்லாமேதமிழ்தான்

8 comments:

said...

இனி எல்லாம் அம்பேல் :)

said...

செத்தாண்டா சேகரு

said...

செத்தாண்டா சேகரு

said...

அம்பேல் தமிழ்ச் சொல்லே.....

நல்ல விளக்கம்!

said...

நச், நச், நச், நச், நச்!

said...

நல்லவிளக்கம் தந்து இது குறித்த ஐயத்தினை அம்போல் ஆக்கிவிட்டீர்கள்...!

said...

மொத்தமாகத் தவறு யுவர் ஆனர்!
அம்பேல் என்றால் இடத்தை விட்டு அகல்வது அல்ல அர்த்தம்,மாறாக 'சுத்தமாக முடியவில்லை' என்றே அர்த்தம் கொள்ள வேண்டும் .
நான் அம்பேல் என்றால் என்னால் சுத்தமாக(முற்றிலுமாக) முடியவில்லை என் அர்த்தம் .
இப்பொழுது அர்த்தத்திற்கு வருவோம் ...
அம்பேல் என்றால் அம்பு+ஏல்....அதாவது அம்பு இல்லை ...அதாவது என்னிடம் சுத்தமாக (முற்றிலுமாக) எய்வதற்கு அம்பு இல்லை என்றே கொள்ள வேண்டும்!
ஏனெனில் எல்லா மொழிகளிலும் எந்த ஒரு காரியமும்(வேலை) - உரையாடல் உட்பட - அம்பு எறிவதுடனேயே ஒப்பிடப்படுகிறது, ஆதி மனிதனின் முதன்மையான வேலை என்பதால் .
உதாரணமாக ஒரு உரையாடலில். கேள்வியை ஆரம்பிக்கும் முன்பு ஆங்கிலத்தில் 'shoot' என்று சொல்வது அதனால்தான்.
எனவே அன்பர்களே 'அம்பேல்' என்பதை 'என்னுடைய முதுகில் இருக்கும் அம்பறையில் (சரியான வார்த்தை தெரியவில்லை) அம்புகளே இல்லை' என்றே கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

எனவே அன்பர்களே !
அம்பேல் என்றால் , என்னிடம் திறன் இல்லை ...ஆளை விடு , என்றே கொள்ள வேண்டும் !

இப்போ நான் அம்பேல் !
:)