Sunday, December 22, 2013

சொன்னது சாருவா? சொல், சொல், சொல்....

இதை எழுதும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா தேவர்மகன் க்ளைமேக்ஸில் கமலஹாசர் சொல்லும் "கடைசியில் என்னையும் கத்தி தூக்க வெச்சுட்டீங்களேதான்." போகட்டும்.
எனக்குச் சாருவின் எழுத்துகள் பிடிக்காது. அவரின் பதிவுகள் பக்கம் கூடப் போக மாட்டேன். நமக்கு ஒவ்வாத கருத்துகளைப் படித்து நம் ரத்தக்கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணம்தான். ஆனாலும், நண்பர்கள்(?) சமயத்தில் தரும் சுட்டிகளால் சிலவற்றைப் படிக்க வேண்டியதாகி விடுவதுண்டு. இன்று அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது அரவிந்தன். இந்த சுட்டியைத் தந்தார். பின்புலம் தெரிவதற்காக அதற்கு முந்தைய பதிவொன்றும் படித்தேன். ஒரு சிறிய இன்ப அதிர்ச்சிதான்.
எனக்குப் புரிந்த அளவுக்கு விஷயம் இதுதான். பேஸ்புக்கில் எழுதி வரும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் தன் முதல் நாவலை எழுதி இருக்கிறார். அதன் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சாருவிற்கும் அழைப்பு போய் இருக்கிறது. ஆனால் புத்தகத்தைப் படித்த சாருவிற்கு அந்த நாவல் பிடிக்கவில்லை. அதனால் விழாவிற்கு வர முடியாது என்றும், வேறொரு நாள் அந்த எழுத்தாளரிடம் தன் கருத்துகளைச் சொல்வதாகவும் சொல்லி இருக்கிறார். இதற்குப் பொங்கிய சிலர் வழக்கம் போல சாருவைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள் போல. 
தனக்குப் பிடிக்கவில்லை என்ற பொழுதில் அவ்விழாவிற்கு சென்று போலியாக சில வார்த்தைகளைப் பேசுவதில் தனக்கு ஒப்புதல் இல்லை. அதே சமயம் அங்கு ஒரு இளம் எழுத்தாளரின் குறைகளைப் பட்டியலிட மனது வரவில்லை. எனவே தான் வரவில்லை என்று அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்பதே என் எண்ணம். 
இது குறித்த அவர் பதிவில் கூறி இருக்கும் வேறு ஒரு கருத்துதான் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. 
ஒரு வாக்கியம் கூட இலக்கணமாக இல்லை.  தமிழை அவர் rape செய்திருக்கிறார்.  இலக்கணத்தை உடைக்கலாம்.  ஆனால் அதை பிரக்ஞாபூர்வமாகச் செய்ய வேண்டும்.  இலக்கணமே தெரியாமல் செய்யக் கூடாது.  ஒரு வாக்கியம் கூட வாக்கியமாக இல்லை.
எழுதும் அனைவரும், முக்கியமாக, எழுத்தாளன் எனக் கருதிக் கொள்பவர்கள் அனைவரும் மொழியை சரியாகக் கையாள வேண்டியது அவசியம். எழுத்தாளர்களின் பிரபலம் கூடக்கூட இந்தப் பொறுப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் பலரும் இதைச் சொன்னால் கோபப்படுகிறார்களே தவிர அதன் பின் இருக்கும் உண்மையை உணர்வதே இல்லை. 
இன்று வெளியாகும் வலைப்பதிவுகள், கதைகள், நாவல்கள், பொதுஜன ஊடகக் கட்டுரைகள், செய்திகள் என அனைத்திலும் எழுத்துப்பிழைகள், வரிவடிவப்பிழைகள் என விதவிதமாய்ப் பிழைகள்தான் மலிந்திருக்கின்றன. இதற்குப் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
இப்படி எழுதலாமா எனக் கேட்டால், பாரதி, "நல்லதோர் வீணை" என எழுதவில்லையா என்பார்கள். அவன் எங்கு ஓர் எங்கு ஒரு எழுத வேண்டும் எனத் தெரியாமல் எழுதவில்லை. அதே போல கவிதையின் சந்தத்திற்காகச் செய்யப்படும் சில மாற்றங்களை உரைநடையில் அனுமதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 
"ஒரு வீடு ஒரு உலகம்" எனத் தலைப்பு வைத்த ஜெயகாந்தன் கூட அது இலக்கண மீறல் என்று அறிந்துதான் செய்திருக்கிறார். அதற்கு பின் இருந்த சிந்தனை எவ்வளவு பெரிய விளக்கமாய் வந்திருக்கிறது பாருங்கள்.

தான் எழுதுவதே தமிழ், தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்றும் இருக்கும் இலக்கணத்தை விட்டுவிட்டு புதிய இலக்கணங்கள் வேண்டும் எனப் பேசும் பிரபலங்கள் மத்தியில் இந்தக் கருத்தை சொல்லி இருக்கும் பிரபலமான சாரு நிவேதிதாவிற்கு என் வாழ்த்துகள். 
இதே கருத்தை வலியுறுத்தி நான் சில நாட்களுக்கு முன் எழுதிய மற்றுமொரு பதிவு இது!
பிகு: இதை எல்லாம் சொன்னவர், ஆன்மீகம் என்பது தவறு என யாரேனும் சுட்டிக் காட்டி ஆன்மிகம் என எழுதத் தொடங்குவாரானால்  அவரின் நேர்மைக்கு அது சான்றாக இருக்கும். 

5 comments:

said...

அருமை. அவர் பதிவில் குறிப்பிட்ட அவ்வரிகளை மிகவும் ரசித்தேன். பிறகு தான் இந்த ட்வீட். https://twitter.com/erode14/status/414449084997451779
இதை ஒருவரும் கவனிக்கவில்லை.

சாருவின் பதிவைப் படிப்பதற்கு முன் நான் கண்டது மாமல்லன் பதிவு.

said...

அளவிற்கு அளவுக்கு

எது சரி ? நீங்கள் அளவிற்கு என்று பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் அளவுக்குதான் சரி என்பது என் எண்ணம்.

மற்றபடி உங்கள் கருத்துக்கு +1

said...

சங்கர்

நீங்கள் சொல்வது சரியே.

அளவுக்கு என்றுதான் வர வேண்டும். பாரா பல முறை சொல்லிவிட்டார் என்றாலும் தப்பு செய்து கொண்டே இருக்கிறேன்.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மாற்றிக் கொள்கிறேன்.

said...

ஆ.அ.ச. ஹிஹிஹி, நான் எப்போவோ ஆன்மீகம் என்பதை ஆன்மிகம் என மாத்திட்டேனே, பார்க்கலை??? :))) எங்கே வந்தால் தானே தெரியப் போகுது! :(

said...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

ஒரு வேளை "அன்பிற்கும்", "அளவிற்கு" சரிதானோ ?