Wednesday, December 10, 2014

சக்கர இனிக்கிற சக்கர....

வழக்கம் போல இந்த என். சொக்கன் சும்மா இருக்காம நம்மளை இழுத்து விட்டுட்டாரு. தருமி மாதிரி எதாவது கேள்வியைக் கேட்டுட்டு நாம அல்லாடறதைப் பார்க்க அவருக்கு ஒரு சந்தோஷம். 
இன்னிக்கு கேள்வி சர்க்கரை ஏன் இனிக்குது. இதைச் சும்மாக் கேள்வியாக் கேட்காம ஒரு பாட்டாவே பாடிட்டார். சர்க்கரை இனிக்கிற சர்க்கரை சினிமாப் பாட்டு எல்லாம் இல்லை. இவரே குழந்தைப்பாட்டு ஒண்ணு புனைந்து கேள்வியைக் கேட்டுட்டார். அந்தப் பாடலை இங்க போய் படிச்சுட்டு வந்திடுங்க - https://www.facebook.com/nchokkan/posts/10152643068653292
படிச்சாச்சா? கேள்வியைப் பாட்டாவே கேட்டாப் பதிலையும் அப்படித் தரதுதானே முறை. அதே குழந்தைப்பாடல் மெட்டுல நாமளும் பதில் சொல்லியாச்சு. 

தின்னத் தின்னத் தித்திக்கும்
… தீனியில் சர்க்கரை தானுண்டே
என்ன என்ன காரணத்தால்
… என்றும் இப்படி இனிக்கிறதே? 
உலகில் உள்ள பொருளெல்லாம்
… உண்டா னதுவும் அணுவாலே
பலரும் விரும்பும் சர்க்கரையில்
… பார்ப்பாய் இருவித அணுக்கூறே*
குளுக்கோஸ் மற்றும் ப்ருக்டோஸின்
… குணத்தால் தான்வரும் அவ்வினிப்பே
பளுவை ஏற்றும் சர்க்கரையின்
… பாகம் தானிவைப் பார்த்துக்கோ 
உண்ணும் போது உன்நாக்கில்
… உள்ள பலவகை சுவைமொட்டு
ஊணில் உள்ள ருசிகளையே
… உனக்கு அறியத் தான்தருமே 
இனிப்பை அறியும் மொட்டுகளை
… இந்த இரண்டும் போய்ச்சேர
மனிதர் நரம்பும் மூளைக்கு
… மறக்கா தனுப்பும் சுவைதனையே 
விளக்கம் இதுதான் சர்க்கரையின்
… விஞ்ஞா னமும்நீ அறிந்தாயே
அளவாய் உண்டால் அமிர்தம்தான்
… அதையும் நீயும் அறிவாயே! 
* molecule பொதுவாக மூலக்கூறு என வழங்கப்படும். இரண்டுக்கும் மேற்பட்ட அணுக்களால் ஆன Chemical Compound என்பதை அணுக்கூறு எனச் சொல்லி இருக்கிறேன். பொதுவாக நாம் உண்ணும் சர்க்கரை (சுக்ரோஸ்) குளுக்கோஸ் அல்லது ப்ருக்டோஸ் எனப்படும் அணுக்கூறுகளினால் ஆனவையாகவே இருக்கும். 
சமயத்தில் நம்ம பாட்டைப் படிச்சுட்டு நம்ம கிட்டவே வந்து புரியலை விளக்கஞ்சொல்லுன்னு கேட்பாங்க. அந்தக் கொடுமைக்குக் காத்திருக்க வேண்டாமேன்னு ஒரு பதவுரையும் போட்டுடறேன். 
Sugar is sweet because when our tongue detects a sugar molecule the nervous impulse it sends says "sweet". Sucrose, or table sugar, is formed from two simple sugars: glucose and fructose.

2 comments:

said...

சர்க்கரையை விலக்கியாச்சு. பாடலை ருசிச்சாச்சு

said...

ஆஹா.... ஒரே இனிப்போ!

என்னடா இது நம்ம பதிவில் ஒரு காலத்தில் தலைப்பா போட்டுருந்தேனேன்னு மயங்கிட்டேன்:-)