Saturday, August 29, 2015

தாராபுரம் தாம்பரம்

மாதா பிதா குரு தெய்வம் என தெய்வத்திற்கு அடுத்த படியாக குருவினை வைத்து வணங்கும் பாரம்பரியம் நம் பாரம்பரியம். அப்படிப்பட்ட குரு என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லித் தந்த அந்த பாரம்பரியமே யார் என்ன சொன்னாலும் சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லித் தந்திருக்கிறது. வள்ளுவனும் கூட எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறான். பதிவுலகத்திலே எனது குருவான துளசி ரீச்சரின் இன்றைய வதனப்புத்தகப் பதிவினைப் பார்த்ததும் ( அந்தப் பதிவிற்கான சுட்டி! ) மனது பதபதைத்துப் போனது. ரீச்சர் சொல்வதே சரி என எடுப்பதா அல்லது அதிலிருக்கும் குறைகளைச் சுட்டிக் காண்பித்து உண்மையை நிலைநாட்டுவதா என இருதலைக் கொள்ளி எறும்பானேன். வள்ளுவப் பெருமானின் வழி நடப்போம் என்றெண்ணி இந்த பதிவினை எழுதுகிறேன். ரீச்சர் அவர்கள் இந்தப் பதிவினைப் பொறுத்தருள வேண்டும். 

ரீச்சர், அவர்கள் எழுதி இருக்கும் இந்தப் பதிவின் (ரீச்சரின் பதிவு! ) அறிமுகமாக வதனப்புத்தகத்தில் எழுதி இருப்பது என்னவென்றால் "தாராசுரத்துக்கும் தாம்பரத்துக்கும் என்ன கனெக்‌ஷன்? தாராசுரம் தாம்பரம் தலையிலே கனகாம்பரம், ஏகாம்பரம் சிதம்பரம் இடுப்பிலே பீதாம்பரம்... கொஞ்சம் அபத்தமா இல்லே? அந்தக் காலத்து சினிமாப் பாட்டு இது..” என்பதே! 

இதில் ஒன்றல்ல இரண்டு குறைகள் இருக்கின்றன. முதற்கண் ரீச்சர் அவர்கள் வைணவத் தல உலா செல்லும் பொழுது தாராசுரம் போய் வந்ததால் தாராபுரம் தாம்பரம் எனத் தொடங்கும் பாடல் தாராசுரம் தாம்பரம் என மாறுமா? மாறக்கூடாதல்லவா? எனவே அதுவே முதற்குற்றம். மேலும் பேசும் முன் அப்பாடலை கேட்போம். மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. கேவி மகாதேவன் இசையில் தஞ்சை ராமைய்யா தாஸ் எழுதிய இப்பாடலைப் பாடியவர்கள் ஏ ஜி ரத்னமாலா மற்றும் எஸ் சி கிருஷ்ணன். 


இந்தப் பாடலில் இருந்து ரீச்சர் எடுத்தாண்ட முதல் இரு வரிகள் இவைதாம் 

ஆண்: அடி தாராபுரம் தாம்பரம் தலையிலே கனகாம்பரம்
பெண்: அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்புல பீதாம்பரம் 

சரி, வரிகளில் கண்ட தவறினை நேர்படுத்தியாகிவிட்டது. அடுத்து என்ன குறை கண்டீர் என ரீச்சர் வெகுண்டெழுமுன் அதையும் பார்த்துவிடுவோம். இவ்வரிகளை அபத்தம் என்றாரே. அது அல்லவா பெருங்குறை? இவ்வரிகளா அபத்தம்? சைவ இயக்கத்தின் கருப்பொருளை அல்லவா இவ்விரு வரிகளில் சொல்லி இருக்கிறார் கவிஞர். அதைப் போய் அபத்தம் எனச் சொல்லலாமா? 

தாராபுரம் என்றால் என்ன? தாரா என்றால் வாத்து என்பர் இக்காலத்தினர். ஆனால் தாரா என்றால் மனைவி என்ற ஒரு பொருளும் உண்டு. புரம் என்றாலோ உடல். மனைவியைத் தன்னுடலில் கொண்டவன் என்பதே தாராபுரம் என்ற சொல்லின் பொருள். அப்படி மனைவியைத் தன்  உடலில் கொண்டவனான சிவன் யார்? அவன் பரமசிவன். பரம் என்றால் எல்லாவற்றிற்கும் தலைவன் என்று பொருள். அதைத்தான் தாம் பரம் என்கிறார் கவிஞர். தன் மனைவியை உடலில் கொண்டவந்தான் பரம்பொருளான இறைவன் சிவன். 

அவனிருப்பதோ கயிலாயம். அக்கயிலையில், விடியற்காலையில் சூரியன் உதிக்கின்ற அவ்வேளையில், ஆகாயம் எப்படி இருக்குமென்றால் இரத்தச் சிவப்பாக இருக்குமாம். இங்கு கவிஞர் மிக அருமையான வார்த்தை விளையாட்டு ஒன்றினை விளையாடி இருக்கிறார். தலையிலே என்றால் உச்சியிலே என்றும் பொருள் கொள்ளலாம் ஆரம்பத்திலே என்றும் பொருள் கொள்ளலாம். நாள் தொடங்குகின்ற அந்த விடியற்காலையிலே, இவன் தலை மேலே சிவந்த வானமிருக்கும். கனகு என்றால் சிகப்பு. அம்பரம் என்றால் ஆகாயம். ஆகவே உச்சியிலே நாள் தொடங்கையிலே சிவந்த ஆகாயம் இருக்கும் என்பதை தலையிலே கனகாம்பரம் என்கிறார் கவிஞர்.

ஆண் குரலில் இப்படி சிவனை வருணிக்கத் தொடங்கி ஒரு வரி எழுதியவர் அடுத்தது பெண் பார்வையில் ஒரு வரி எழுதுகிறார். அவர்களுக்கு தோற்றம் ரொம்ப முக்கியம். அதனால் இவன் சிவன், பரம்பொருள் என்பதை எல்லாம் விடுத்து உன் இடுப்புல பீதாம்பரம் என்பதுதான் அவளுக்கு முதலில் தெரிகிறது. ஏன்? பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து என்றார் சுந்தரமூர்த்தி நாயனார். சிவன் என்றால் சடா முடியுடன் மேலே பொடி பூசி, புலித் தோலை ஆடையாகக் கொண்டு சுடுகாட்டிலே அலைபவன் என்ற தோற்றம்தான் முதலில் நம் மனக்கண்ணில் வரும். 

இப்பெண் சிவனை சிதம்பரத்தில் பார்க்கிறாள். இங்கு இவர் பட்டு வேட்டியில் திருமண மாப்பிளை போல காட்சி அளிக்கிறார். உடனே இப்பெண் ஆச்சரியம் தாங்க முடியாமல் அங்கு காஞ்சியில் ஏகாம்பரம் என பெயர் கொண்டவனே இங்கு சிதம்பரத்தில் இப்படிப் பட்டு வேட்டியில் இத்துணை அழகாக இருக்கிறாயே என்று பாடுகிறாள். அதுதான் ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பிலே பீதாம்பரம். இப்பொழுது சொல்லுங்கள் இந்தப் பாட்டா அபத்தம்? 

இன்னும் சொல்லப் போனால் முதல் வரிக்கு பண்டிதர் சிலர் வேறு ஒரு பொருளையும் கூடச் சொல்வர். அவர்கள் அடிதாராபுரம் என்பதை பிரமனும் விஷ்ணுவும் சிவனின் தலையையும் பாதத்தையும் காண முயன்ற கதையை நினைவில் கொண்டு அடிதாராபுரம் என்றால் பாதத்தினைப் பார்க்க முடியாத உடலினைக் கொண்டவனே என்றும், தாம் பரம் தலையிலே கனகு அம்பரம் எனச் சொல்வது முதலில் பாதத்தைச் சொன்னதினால் அடுத்து அவன் தலையைப் பற்றிச் சொல்வதாகக் கவிஞர் அமைத்துள்ளார் என்பர். 

இப்படி எப்படிப் பார்த்தாலும் சைவ சமய சித்தாந்த நெறிகளை எளிமையாகக் கூறும் பாடலாகவே அமைந்திருக்கிறது இப்பாடல். நம் கவிஞர்கள் என்றுமே இந்து ஞான மரபை அடிப்படையாக கொண்டே பாடல் புனைவர் என்பதற்கும் இப்பாடலே சாட்சியாக அமைகிறது. இனியேனும் நாம் இப்படிப்பட்ட நல்ல பாடல்களின் கருப்பொருளை உணராமல் அவற்றை அபத்தம் என விலக்கி விட வேண்டாம் என விண்ணப்பிக்கிறேன். இச்சிறியவனின் அத்துமீறலை ரீச்சர் மன்னித்தருள வேண்டும். 

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 

#எல்லாமேதமிழ்தான்